ஜோகூர் மாநிலத் தேர்தல்: 172 வேட்பாளர்கள் களத்தில்; மூன்று தொகுதிகளில் ஐந்து முனைப் போட்டி
ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிட 172 வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 56 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் மூன்று தொகுதிகள் ஐந்து முனைப் போட்டியை சந்திக்கின்றன. தேர்தல் பிரச்சார காலம் ஜூலை 10 வரை நீடிக்கும்.
ஜோகூர் மாநிலத்தின் 16வது சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 56 மையங்களில் சுமுகமாக நிறைவடைந்தது.
மலேசிய தேர்தல் ஆணையம் (SPR) வெளியிட்ட தகவலின்படி, வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்ததைத் தொடர்ந்து மொத்தம் 172 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர். தாக்கல் செய்யப்பட்ட எந்தவொரு வேட்புமனுவும் நிராகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சிகளின் அடிப்படையில் பாரிசான் நேஷனல் (BN) மற்றும் பக்காத்தான் ஹராப்பான் (PH) தலா 56 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பெரிக்காத்தான் நேஷனல் (PN) 33 தொகுதிகளிலும், பெர்சாமா கட்சி 15 தொகுதிகளிலும், மூடா 4 தொகுதிகளிலும், ASLI மற்றும் PSM தலா ஒரு தொகுதியிலும் களமிறங்கியுள்ளன. மேலும், ஆறு தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 56 தொகுதிகளில் 14 தொகுதிகள் நேரடி இருமுனைப் போட்டியை சந்திக்கின்றன. 27 தொகுதிகளில் மும்முனைப் போட்டி, 12 தொகுதிகளில் நான்கு முனைப் போட்டி மற்றும் மூன்று தொகுதிகளில் ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. புக்கிட் நானிங், புதேரி வாங்சா மற்றும் புக்கிட் பத்து ஆகிய தொகுதிகள் ஐந்து முனைப் போட்டியை காணும் முக்கிய பகுதிகளாக உள்ளன.
போட்டியிடும் 172 வேட்பாளர்களில் 138 பேர் ஆண்களும், 34 பேர் பெண்களும் ஆவர். வயது அடிப்படையில் 23 வயதுடைய ஜோகூர் லாமா தொகுதி வேட்பாளர் இளையவராகவும், 73 வயதுடைய ஸ்தூலாங் தொகுதி வேட்பாளர் மூத்தவராகவும் உள்ளனர்.
வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் பிரச்சார காலம் உடனடியாக தொடங்கியுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் 56 தேர்தல் பிரச்சார அமலாக்கக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.