கோலாலம்பூரில் போக்குவரத்து விதிமீறல்: 285 அபராதச் சம்மன்கள், 11 வாகனங்கள் பறிமுதல்
கோலாலம்பூரில் நடைபெற்ற கூட்டு போக்குவரத்து அமலாக்க நடவடிக்கையில் 285 அபராதச் சம்மன்கள் வழங்கப்பட்டதுடன், விதிமீறி நிறுத்தப்பட்டிருந்த 11 வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டன.
கோலாலம்பூரில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், கோலாலம்பூர் நகராண்மை கழகம் (DBKL), சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) மற்றும் அரச மலேசியக் காவல்துறை (PDRM) இணைந்து சிறப்பு அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டன.
கடந்த செவ்வாய்க்கிழமை ஜாலான் துன் சம்பந்தன் மற்றும் ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா ஆகிய முக்கிய சாலைகளில் நடைபெற்ற இந்த கூட்டு சோதனையில், போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு மொத்தம் 285 அபராதச் சம்மன்கள் வழங்கப்பட்டன.
சிவப்பு விளக்கை மீறிச் செல்வது, பிரதான சாலைகளில் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்துவது, பாதசாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான (OKU) நடைபாதைகளை ஆக்கிரமிப்பது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் இந்த நடவடிக்கையின் முக்கிய இலக்குகளாக இருந்தன.
சோதனையில், அரச மலேசியக் காவல்துறை (PDRM) 45 சம்மன்களையும், சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) உரிமம் மற்றும் ஆவண விதிமீறல்களுக்கு 160 சம்மன்களையும், கோலாலம்பூர் நகராண்மை கழகம் (DBKL) 80 சம்மன்களையும் வழங்கியது.
மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 11 வாகனங்கள் அப்பகுதியில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டன.
தலைநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இதுபோன்ற ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளைப் பின்பற்றி பொறுப்புடன் வாகனம் ஓட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.